Wednesday, July 27, 2011

வானமே கூரையெனக் கொண்டு மக்கள் வாழும் அவலம்

எல்லாவற்றையும் இழந்து உயிரைமட்டும் கையில் பிடித்துக்கொன்டு தப்பி வந்த மக்களுக்கு அந்த உயிர் கூட இல்லாது போகுமானால் பிறகு எதற்கு இந்த போலியான மனிதாபிமானப் பணிகளும் மீள்குடியேற்றங்களும் செய்ற்பாடுகளும்.
வானமே கூரையெனக் கொன்டு மக்கள் வாழும் அவலம் யாழப்பாணத்தில் காணப்படுகின்றது என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா?




மீள் குடியேற்றம் என்ற பெயரில் அவர்கள் படும் இன்னல்கள் எப்பொழுது தான் வெளியுலகிற்க்கு தெரியவரப்போகின்றனவோ! இவ்வாறு மீள்குடியமர்தப்பட்ட மக்களின் வாழ்க்கை பல்வேறு போரட்டங்களுக்கு மத்தியில்  தொடர்கின்றது விழிகளை பிதுங்கவைக்கும் அளவிற்க்கு அவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலையில் கானப்படுகின்றது போர் இடம் பெற்று காலங்கள் கடந்து சென்ற நிலையிலும் போர் தந்து விட்டுப் போன வலிகளின் வடுக்கள் இன்னமும் ஆறாமல் நெஞ்சில் நெருஞ்சியாய் உருவெடுத்திருக்க நடைப்பிணங்களாய் வாழுகின்ற நிலையே தொடர்கிறது.



 நலன்புரி நிலையங்களில் இருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் சொந்த இடங்களிற்க்கு மீள் குடியமர்த்தப்பட்ட போர் தின்ற மக்களின் வாழ்வு இன்னமும் இருக்கின்றது J/90 ஐ கிராமசேவகர் பிரிவாகக் கொண்ட பூம்புகார் மீள்குடியமர்தப்பட்ட மக்களின் வாழ்வியலின் தன்மையும் அதன் முறைமையும் எங்களை உறைய வைக்கின்றது இவ்வாறான ஒர் வாழ்வை நாம் வாழ்வோமா என சிந்தித்துப் பார்க்கையில் எம் மனதில் இனம்புரியாத ஒர் நெருடல் இன்று வரை தொடர்ந்த வாறே உள்ளது



 J/9 பாதையூடாக பேரூந்தில் இலகுவில் பயணித்த நாம் கிழக்குஅரியாலை முள்ளிச்சந்தியிலே இறங்கினோம் சந்தியில் இருந்து சுமார் 5 கிலோமீற்றர் வரை உட்செல்ல வேண்டும் என அப்போது எமக்கு தெரிந்திருக்க வில்லை கால் நடையாக தொடர்ந்தது எம் பயணம்.சிறிது தூரத்தில் வீதியோர மரத்தடியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க மூன்று பெண்கள் தம் அருகே பனையோலைப் பெட்டியுடன் உட்கார்ந்திருந்தனா. அவர்களின் தோற்றமும் பேச்சும் கிராமத்துப் பாங்கை பிரதிபலிப்பதாக இருந்தது அவர்களிடம் நாம் சென்றடைய வேண்டிய பூம்புகார் பற்றி விசாரித்தபோது “பூம்புகாரோ அது இங்க இருந்து ஆறு கட்டைக்கு மேல இருக்குதுங்கோ நடந்தே போறீயள”; என அவர்கள் வியந்த விதம் நாம் சென்றடைய வேண்டிய தூரத்தை உணர்தியது. அவர்கள் கூறிய போது எமக்கு எற்பட்ட மனநிலை இது எம்மால் முடியுமா? என்பது தான் இந்த மனநிலையுடனேயே அங்கு நாம் கண்ட கிராமத்துக் காட்சியை கமராவில் பதித்த படியே சென்றோம.; சுமார் ஒரு கிலோ மீற்றர் எவ்வாறு நகர்ந்தது என்பதே தெரியாமலே நாவலடிக் கிராமத்தைத் தாண்டி சிறிது தூரம் சென்றபோது ஆள்அரவம் அற்ற அந்த இடத்தில் தீடிரென வாகனச் சத்தம் கேட்டது. அந்தவேளை ஆவலுடன் திரும்பிப் பார்த்தபோது றைக்டர் ஒன்று வருவது தெரிந்தது.



வழியில் சந்தித்த அந்த மூன்று பெண்களும் ரைக்டருக்குள் இருந்தார்கள். அவர்களை மறித்து அவ்வாகன ஓட்டுனரிடம் எங்களை அறிமுகப்படுத்தி பூம்புகாரினுடாகவா போகின்றீர்கள்? என்று விசாரித்தோhம் அதற்க்கு அவர் “ஓம் ஓம் நாங்களும் அதால தான் போறம் ஏன் பிள்ளைகள் இந்த உச்சிவெயிலில வெளிக்கிட்டனிங்கள்” என் வினாவினாh.; அவர்களின் அனுமதியுடன் றைக்டரில் ஏறிக்கொண்டோம் எம் வாழ்வில் முதல் தடவையான றைக்கடர் பயணம் மிகவும் சுவாரசியமாகவே அமைந்தது.றைக்கரில் பல முட்கம்பிக்கட்டுகளின் நடுவே அப் பெண்களுடன் நாம் உட்காந்திருந்தோம் நெடுந்தூரப் பாதை வழியே அவ் ரைக்டர் வேகமாக சென்ற கொண்டிருந்தது இரண்டு புறங்களும் கண்னுக்கெட்டிய தூரம் வரை வெட்டவெளியாகவே காட்சியளித்தது .


இது யுத்தத்தின் சுவடுகள் என  தெட்டத்தெளிவாக எமக்குப் புலப்படுத்தியது. அன்று பனை மரக்காடுகள் தென்னம் சோலைகள் என இருந்த இடத்தில் இன்று அதன் வேர் கூட இல்லை என்பதும் அங்காங்கே செல்வீச்சுக்களால் ஏற்படுத்தப்பட்ட பாரிய குழிகளும் என அப் பாதை தொடர்ந்தது. சுமார் நான்கு கிலோ மீற்றர் வரை திருத்தப்படாத நிலையில் குன்றுகளும் குழிகளுமாக காணப்பட்ட வீதியிலேயே சென்ற ரைக்டரின் ஓசை எமக்கு சங்கீதமாகவே ஒலித்தது.ரைக்ரரினுள் இருந்த முட்கம்பிக் கட்டுக்கள் எதற்கு என விசாரித்தோம் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதில் உயர் பாதுகாப்பு வலயமாகவே இப் பகுதி காணப்பட்டது எனவே மக்கள் சென்று வர அனுமதிக்கபடாத நிலையில் தற்போழுது மூன்று மாதங்களுக்கு முன் தான் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டனர்.எனவே இங்கு கட்டாக் காலிகளாகவே கால்நடைகள் அதிகமாக காணப்படுவதால் மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்க்கு அக் கம்பிகளைப் பயன்படுத்தி கூடுகளை அமைப்பர் இதற்க்குள் அவ் மேய்ச்சல் மாடுகள் சிக்கிக் கொள்ளும் எனக் கூறினார்கள். வீதியின் இரு மருங்கும் கம்பிக் கூடுகள் பல கிலோமீற்றிர் வரை அமைக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது சற்றுத்தொலைவில் பற்றைகளுக்கிடையில் மழைக் காளான்கள் முளைத்திருப்பது போன்று வெள்ளைத்தறப்பால்கள் காணப்பட்டன அவ்விடத்தைக்காட்டி “இது தான் பிள்ளைகள் பூம்புகார் என்றார்கள்



எனவே நாம் றைக்ரரில் இருந்து இறங்கி அவர்களிடம் இருந்து விடைப்பெற்றுக் கொண்டோம் வீதியில் இருந்து காணிகளுக்குள் நுழையும் பிரதான பாதையூடாக அக் கிராமத்தினுள் நுழைந்தோம் .ஆரம்பத்தில் இக்கிராமத்தின் மீள் குடியமர்த்தப்பட்ட சிறுவர்களின் கல்விபற்றிய நிலையை அறிவதையையே நோக்கமாகக் கொண்டு சென்றோம் ஆனால் அங்கு சென்று பார்த்த போது தான் தெரிந்தது அவர்களின் அடிப்படை வசதிகள் கூட இன்னும் அடிமட்டத்திலேயே இருக்கின்றது என்பது அவர்களின் இருப்பிடங்கள் கிடுகளுடனும் றரப்பால்களுடனும் முடிந்து விட்டது .மழைத்தூறலுக்குக் கூட தாக்குப்பிடிக்க முடியாத குடிசைகள் என்ற நிலையில் உள்ள அக்கிராம மக்கள் நாங்கள் தங்களுக்கு ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தித் தருவோம் என்ற நம்பிக்கையுடனும் ஏக்கத்துடனும் நம் முகத்தைப் பார்தவாறு நம்மை நோக்கினர்

நகர்புற மக்களிடம் நாம காணாத அன்பு பாசம் வரவேற்க்கும் தன்மை. எத்தனை அழியா ரணங்கள் மனதில் இருந்தாலும் அதை முகபாவனையில் வெளிக்காட்டாத அந்தச் சிரிப்பு. .ஆனால் அவர்கள் தம் வலிகளையும் வேதனைகளையும் மனதிற்குள் சுமக்கிறார்கள் என்பதை அவர்களின் பேச்சினுடாக அறிய முடிந்தது இக்கிராமத்தில் நாம் முதலில் கண்ட பெரியவா.; .என்ன ஒர் மிடுக்கான தோற்றம்  தலமைத்துவத்தைத் தாங்கும் தன்மை அவரின் கைகளில் வெள்ளைத்தாளை சுருட்டியபடி கிராமத்தின் பிரதான பாதையூடாக ஒவ்வொரு குடும்பத்தினரடமும் நீங்க  போம் மாத்திட்டிங்களா என்று கேட்டவாறு சென்றார் அவரைப் பின்தொடர்ந்த நாம் இடைமறித்து எங்களை அறிமுகப்படுத்திய வாறு இக்கிராமம்; பற்றிய கேள்வியை எழுப்பினோம் அவர் எமக்கு நடந்து கொன்டே பதிலலித்தார் இக்கிராமத்தைப்பற்றிய தகவல்கலை கூறியவாறே இடையிடையே ஒவ்வொரு குடிசைக்கும் முன் நின்று போம் பதிந்து விட்டிர்களா என்று கேட்வாறு சென்றார்.நாம் அவரைப்பற்றி விசாரிக்கையில் தான் அக்கிராமத்தின் தலைவர் என்றும் தன் பெயர் செல்லத்துரைத் திருநாவுக்கரசு என்றும் கூறினார் மேலும் நாம் விசாரிக்கையில் பூம்புகாரில் பதிவுகளின் படி மொத்தமாக 73 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளதாகவும் பதிவுகள்அற்ற நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து பல கடும்பங்கள் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார் மீள்குடியமர்தப்பட்டு மூன்று மாதங்கள் ஆகின்றன இருப்பினும் பல குடும்பங்கள் குடும்ப அட்டையை J/90 பிரிவிற்க்கு மாற்றாமல் உள்ளனர் எனவே இப்பிரிவுக்க மாற்றுவதற்கான பத்திரமே இவையென கையில் இருந்த பத்திரங்களைக் காட்டியபடி சென்று கொண்டிருந்தார் அவரின் அறிமுகத்தோடு மாதர் சங்கத்தலைவி அன்ரனி ரஞ்சனாதேவி மற்றும் மாதர்சங்கச் செயலாளர் தவராணியையும் சந்தித்தோம் மீதிப்பயணம் அவருடனே.


செல்லும் வழியில் பனையோலையினாலே சில வீட்டு வேலிகள் அடைக்கப்பட்டிருந்தன ஏனைய வீடுகள் மேற்கூரைகள் கூட இல்லாத நிலை கவலைக்கிடமான விடயமே. .கதவுகள் இல்லாத குடிசைகள் இரண்டு சுவர்கள் மாத்திரம் கொண்ட வீடுகள்.மரத்தடியில் வாழ்க்கை என  வெட்டவெளியில் அவர்கள்படும் இன்னல்கள் தான் எத்தனை?





சிறிது தூரம் தாண்டிய பின் அங்கே கண்ட காட்சி எங்களை ஸ்தம்பிதம் அடையச்செய்தது  கொழுத்தும் வெய்யிலில் சுமார் 65 வயதைத்தாண்டிய போதும் தனது குடிசையை தானே அமைக்கும் கொடுமை. பார்த்தவுடனே கலங்காத நெஞ்சமும் ஒரு கணம் கலங்கிவிடும் அடுத்தடியை எடுத்துவைக்க நம் கால்கள் மறுத்தன .சிறிது தொலைவில் அங்கு மண்பிட்டியில் வட்டமேசை மாநாடொன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது ஆம் வேப்பமர நிழலின் மணலிலே நான்கு சிறுவர்கள். தங்கள் எதிர்காலம் குறித்து அறியாத பிஞ்சுகளும் தம் பிள்ளைகளின் கல்விப்புலத்தை நினைத்து ஏங்கும் பெற்றோர்களும். நடந்து முடிந்த யுத்தம் கடந்த காலத்தை மட்டும் பாதிக்கவில்லை இனி வாழ வேண்டிய வருங்கால சந்ததியின் வாழ்க்கையையும் பாழாக்கிவிட்டிருப்பதை உணர்ந்தோம்.
போர் தந்த வலி போதாதென்று இன்று மீள்குடியேற்றப்பட்ட பெயரில் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ள சிறார்களின் கல்வி என்னாவது? இவர்கள் செய்த தவறுதான் என்ன? சூழ்நிலைக்கைதிகளாக்கப்பட்ட இவர்களின் வாழ்விலும் விடியல்; ஒன்று வராதா இதை நினைத்துக்கொண்டிருந்த போது. மெல்லிய சத்தம் “யார் ராணியக்க இவங்க.. என்ற கேள்வியுடன் ஆரம்பமானது .தவராணி அவர்கள் எம்மை அறிமுகப்படுத்தினர் நாங்கள் எங்கிருந்து வருகின்றோம் என்று கூறியும் சரியாக விளங்கிக் கொள்ளாத அந்தத் தாய் “எங்களுக்கு என்ன செய்வீனமமாம் ராணியக்கா. பிள்ளைகள் இங்க பாருங்கோமா பெரிசா ஒண்டும் செய்யவேண்டாம் இங்க மலசலகூடவசதி துப்பரவா இல்ல. பொம்பிளங்க நாங்க படுற பாட்ட பாருங்கோ அப்ப தெரியும்…என்று இடைவிடாமல் இக்கிராமப் பிரச்சனைகளை செல்லிமுடித்தார். நாம் கேட்டோம் “அம்மா இங்க பாடசாலை இயங்குகின்றதா? எங்கு இருக்கு? அதைப்பற்றி எதாவது….என்று எங்கள் கேள்வி முழுமையாக பூர்த்தியடைய முதல் அவரின் ஆதங்கமான பேச்சுத் தொடர்ந்தது “பாருங்க பிள்ளைகள் அது தான் பள்ளிக்கூடம் அது கிடக்கிற கேவலத்த பாருங்க அந்த ஆதங்கமான பேச்சுக்கு நடுவில் இடையிடையே அரசியல்வாதிகளுக்கும் சுவாரசியமான அப் பெண்ணின் பேச்சு. அக்கிராம மொழிநடை காய்ந்து போன முகம் வெற்றிலைசப்பிய வாய் என மிக அழகான தோற்றம்


அவர் பாடசாலையை கைநீட்டிக் காட்டினார் பாடசாலைக் கட்டிடம் இதுவா என வாயில் விரலைவைக்கம் அளவிற்க்கு அதன்தோற்றம் அவர் கோவப்பட்டதற்குரிய காரணம் அப்போது புரிந்தது எமக்கு





சிறிது தூரத்திற்கு அப்பால் மிகச்சிறிய வீடு. ஆம் அதுவே பூம்புகார் அரசினர் தமிழக் கலவன் பாடசாலை. தவராணியின் உதவியுடன் அங்கு சென்று பார்தோம் அரைவாசிக் கூரையுடன் ஒரு அறை கொண்ட வீடு பார்கும் போதே இனம்புரியாத கவலை ஒரு பாடசாலை கரும்பலகை கூட இல்லாமல் இயங்குகின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?. கூரையே சீராக இல்லை. கரும்பலகை பெரிய விடயம் கிடயாது தானே! இருபது பிள்ளைகள் கல்விகற்பதாகவும் தரம் ஒன்றில் இருந்து தரம் ஐந்து வரை அனைத்து வகுப்புக்களுமே ஒன்றாக தான் நடைபெறுகின்றனவாம.ஒன்றை சிந்தித்துப் பாருங்கள் நமது இடங்களில் தரம் ஐந்தாம் ஆண்டில் பிள்ளைகள் படிக்கிறார்களோ இல்லையோ அப் பிள்ளைகளின் பெற்றோர்கள் புலமைப்பரிசில்பரீட்சைக்காக எங்கு எல்லாம் வகுப்புக்கள் இடம் பெறுகின்றனவோ அங்கு எல்லாம் பிள்ளைகளை விட்டுவிட்டு வெளியே காவல் நிற்பார்கள். இதற்க்கு பொருளாதாரம் ஒரு தடையல்ல. அனைத்து தரத்தில் உள்ள பெற்றோர்களின் நிலையும் தற்போது இது தான். இவ் ஆசை அம் மக்களுக்கு இருக்காதா ஏன்? தாங்கள் புலமைப்பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்று மாணவாகளுக்கும் தான் எண்ணம் இருக்காதா?
.இதை யோசியுங்கள் தரம் ஒன்று மாணவர்ளுடன் தரம் ஐந்து மாணவன் அப்படி என்னதான் சேர்ந்து படிப்பான். ஆசிரியர்களும் எதை சொல்லிக்கொடுப்பார்கள். இவை தவிர்ந்த மீதித் தகவல்களையும் அவரிடமே; பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. இங்கு வெளி இடங்களில் இருந்து தான் இரண்டு அசிரியர்கள் வந்து கற்பிப்பார்கள் எனவும் ஆசிரியர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய தானும் சென்று கற்பிப்பதாகவும சொன்னார். இங்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் பெயரையோ அவர்களைப் பற்றிய ஏனைய தகவல்களையோ அறிய முயற்சி செய்தும் அக் கிராமமக்களுக்கு  தெரிந்திருக்கவில்லை.


எனினும் அப்பாடசாலை அதிபர் திரு.கணேஸ்வரன் என்பதை தெரிந்து கொண்டோhம். தரம் ஜந்திற்கு மேல் இருப்பவர்கள் இக் கிராமத்தில் இல்லையா? அவர்கள் எங்கு பாடாலைக்கு செல்கின்றனர் என்று கேட்டதற்க்கு “ஒன்பது பிள்ளைகள் வெளியிடப்பாடசாலைகளுக்கு சென்று கல்விகற்று வருவதாகவும் தரம் ஐந்திற்குள் உள்ள பிள்ளைகள் மட்டுமே இங்கு படிப்பதாகவும் சொன்னார்;;;;….அவருடனே இக்கிராமத்தைப்பற்றி கதைத்தபடி சென்றோம.;




இப் பாடசாலை மாணவர்களை சந்திக்கலாமா? ஏனக் கேட்டோம் “உங்களுக்கு தெரியும் தானே இது லீவு நாள் அவங்க எங்கயாவது விளையாடிக் கொண்டிருப்பாங்க என்றார்” எம்மை அவர்களின் வீட்டிற்கு அழைத்து செல்லும்படி கேட்டோம் அவரும் எந்தவித மறுப்பும் இல்லாமல் ‘எனக்கு தெரிந்த வீடுகளுக்கு கூட்டிக்கொண்டு போகின்றேன்” என்று கூறிக் கொண்டே தொடர்ந்தார்.கடற்கரைக்கு அண்மையிலுள்ள ஒர் குடிலுக்கு அருகில் தேமா மரத்தடியில் ஐந்தாறு சிறுவர்கள் விளையாடிக் கொன்டிருந்தார்கள்



எனவே அவர்களை நோக்கிச்சென்றோம் “என்ன குழப்படி செய்கிறீர்களா? வீட்டுப்பாடம் எல்லாம் செய்திட்டிங்களா? செய்யாம வாங்கோ நாளைக்கு நல்ல அடி தருவன் என்று அவரின் அதட்டல் அங்கும் விட்டுவைக்கவில்லை. ஆங்கு சுவாரசியமான விடயம் ஒன்றும் இடம்பெற்றது தொடர்ந்து சிறுவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டோம் என்ன ஆச்சரியம் தரம் ஏழு படிக்கும் மாணவன் இக் கிராம பாடசாலையில் படிப்பதாக தன்னை அறிமுகப்படுத்தினான். மறுமுறையும் கேட்டோம் நீங்கள் எத்தனையாம் வகுப்புப் படிக்கிறீங்க என்று அவன் ஏன் அக்கா  நான் ஏழாம் ஆண்டு தான் படிக்கிறன் என்றான் நமது அருகில் நின்ற தவராணி அதிர்சியடைந்துவிட்டார் “டேய் நீ சதீஸ்ல்லே”நீ எழாம் ஆண்டோ. எங்களைப்போலவே அவரும் ஆச்சரியப்படுகின்றார் என்றால் நீங்களே யோசியுங்கள்


தமது மண்ணில் மீளக்குடியேறிவிடவேண்டும் என்ற அவாவுடன் குடியேறிய மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் படும் அவலம் சொல்லிப்புரியுமா? சொல்லில் தீருமா? பூம்புகாரின் கடற்கரையோரப்பகுதியில் வசிப்பவர்கள் தமது பிரதான தொழிலாக கடற்றொழிலையே மேற்கொண்டு வருகின்றனர்.




ஒரு வேளை உணவுக்குக்குட கடலிற்குச்சென்ற தந்தையின் வரவை எதிர்பார்த்திருக்கும் குடும்பங்கள். செல்லும் வழியில் மீனவர் ஒருவரின் வீட்டினை நோக்கிச்சென்றோம். வீட்டை நெருங்கும் போதே மீன் வாடை. வீட்டைச்சுற்றி நடமாட்டம் உள்ள பகுதிகளில் மட்டும் பற்றைகள் வெட்டப்பட்டிருந்தன. குடிசையின் முன் முட்கம்பிகளின் மேல் விரிக்கப்பட்ட வலை மற்றும் இறால் பிடிக்கும் பறி. தறப்பாள் குடிசையின் முன்னால் மரத்தின் கீழே மூட்டப்பட்ட அடுப்பில் சமையல் ஏற்பாடுகள் மிகச்சாதரணமாக நடந்து கொண்டிருந்தன. சென்ற எம்மை அக்குடும்பத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அவர்களிடம் மெல்ல பேச்சைக் கொடுத்தோம். அவர்களும் இயல்பாக பேசத்தொடங்கினர்.தனது பெயர் அன்ரனி தாஸ் என்று அறிமுகப்படுத்தினார் தனக்கு எழு பிள்ளைகள் அதில் முன்று வயதிற்க்கு வந்த பெண்பிள்ளைகள் என்றும் எழாவது கைக்குழந்தை இங்கு மழசலகூடவசதி இல்லையென்றும் அதற்காக மறைவான இடங்களுக்கும் மற்றம் குளிப்பத்ற்க்கு பொதுக்கிணறுக்கே செல்லவேண்டும் என்றும் கூறியவர் இந்தநிலையில் இப் பெண்பிள்ளைகளை வைத்துக்கொண்டு எப்படி இருப்பது என்று பெருமூச்சு விட்டபடி வலையைத் தூக்கி தோளில் போட்டவாற கடலை நோக்கிச் சென்றார்


தொடாந்து நாம் அந்தக்குடிசையைக் கடந்து சென்ற பொது குடிசைஅருகில் வேப்பமர நிழலில் கதிரையில் முதியவர் ஒருவர் உட்காந்திருக்க அவரது மனைவி சுமார் 65 வயது இருக்கும் தரையில் உட்கார்ந்திருநத்தாட






  .நாம் அவர்களை நோக்கி சென்ற போது ஒர் உறவினரை வரவேற்பது போல மிகவும் அன்பாக வரவேற்றார் எங்களை பார்தவுடன் கதிரையில் இருந்து எழுந்த பெரியவர் கதிரையைக்காட்டி எம்மை உட்காரச்சொன்னார் சொல்லியவாறே கீழே தனது மனைவியின் அருகே அமர்ந்து கொண்டார் “ஜயா நீங்க கதிரயில் இருங்க”என்று சொன்னோம் முழுமையாக சொல்லி முடிப்பதற்க்குள் அவர் கூறிய பதில் அவர் அம் மண்மீது கொண்ட பற்றை தெளிவாகப் புலப்படுத்தியது “இல்ல புள்ளைகள் நீங்க இருங்கோம்மா இந்த பூம்புகார் மண்ணில இருக்க வேண்டும் மண்ணில இருக்கனும் என்டு தானே இவளவுகாலமும் உசிர கையில பிடிச்சிக்கிட்டு இருக்கிரன்”என்றார் தங்கவேலு பாக்கியம் தம்பதியினர் பூம்பகாரில் தாம் வாழ்ந்த இனிமையான நினைவுகளை எம்முடன் பகிர்ந்து கொண்டனர்.மேலும் பலரைச்சந்தித்து கதைத்தோம்

கண்ணீருடன் கடந்த கால ரணங்களையும் போரின் வடுக்களையும் சுமந்தபடியே இம் மக்கள் வாழ்கின்றனர் எங்கள் பயணம் தொடர்ந்தது அந்தப்பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் இம் மக்களின் அவலங்களை வெளிச்சம் போட்டுக்காட்டுவதற்காக.அங்கிருந்து புறப்பட்டு மீளவும் அப்பாதையை வந்தடைந்தபோது  எம்மூலம் ஏதோஒன்று கிடைக்க பெறும் என்ற நம்பிக்கையுடன்; எங்களை வழியனுப்பி வைத்தனர் பூம்புகார் மக்கள். 

No comments:

Post a Comment